குட் பேட் அக்லி திரைவிமர்சனம்
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், தனது தனித்துவமான கதையாக உருவாக்கியுள்ள ‘குட் பேட் அக்லி’ படம், ரசிகர்களை அசத்தும் விதத்தில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அஜித் குமார் முன்னணி வேடத்தில் நடித்துள்ள இந்த படம், அதிரடி ஆக்ஷன், பாசம், பழிவாங்கல் என பல உணர்வுகளைத் தழுவிய மாஸ் கதையம்சத்தை கொண்டுள்ளது.
மும்பையில் வலிமையான மிகப்பெரிய கேங்ஸ்டராக இருந்து வரும் ஹீரோ (அஜித் குமார்) திருமணத்திற்கு பிறகும் தனது கேங்ஸ்டர் வாழ்க்கையை மாற்றத் தயங்குகிறார். தனது மனைவி (திரிஷா) கூறியதால் மகனின் நலனுக்காக தனது பழைய வாழ்க்கையை துறந்து சிறைக்கு செல்ல அதுவே கதையின் தொடக்கமாக அமைத்து இருக்கிறார் இயக்குநர்.
ஆனால் 17 ஆண்டுகள் கழித்து வெளியே வரும் போது, தனது மகன் போதை வழக்கில் சிக்கி சிறைக்குச் செல்வதைக் கண்டு அதிர்ந்து போகிறார். யார் இதற்குப் பின்னணி? பழைய எதிரிகள் திரும்பி வந்திருக்கிறார்களா? இவற்றுக்கான பதில்களையே பரபரப்பான திரைக்கதை மூலம் அழகாக படமாக்கி இயக்கி உள்ளார் ஆதிக்.
அஜித் குமார் தனது ஸ்டைல், ஸ்வேக், பஞ்ச் வசனங்கள் மற்றும் இளமை தோற்றங்களுடன் ரசிகர்களை தெறிக்கவிட்டுள்ளார். ‘ஒன் மேன் ஆர்மி’யாக படத்தைச் சுமந்து செல்கிறார் அஜித். திரிஷா, தனது மென்மையான அழகு மற்றும் நுணுக்கமான நடிப்பில் பாராட்டை பெற்றுள்ளார்.
வில்லனாக அர்ஜுன் தாஸ் தனது மிரட்டல் தோற்றம் மற்றும் தீவிர குரலால் கதையில் வில்லனாக மிரட்டி இருக்கிறார். கார்த்திகேயா தேவ் (அஜித் மகனாக), தனது உணர்ச்சி நிரம்பிய நடிப்பால் கவனத்தை ஈர்க்கிறார்.
சிம்ரன், சிறிய பங்கிலும் ரசிகர்களுக்கு நியாபகத்தினை கிளப்புகிறார். குறிப்பாக வாலி பாணி உரையாடல்கள் படத்தில் ரசிகர்களை ரசிக்க வைக்கிறது.
ஜி.வி. பிரகாஷ் இசையில் எழுச்சி மிக்க பாடல்களும், சூழலை கட்டி பிடிக்கும் BGM-களும் இடம்பெற்றுள்ளன.
கேமரா இயக்கத்தில் 360 டிகிரி சுழற்சி உள்ளிட்ட வித்தியாசமான எடிட்டிங் காட்சிகள் படத்தை புதிய வடிவிலான காட்சி அழகாக மாற்றுகின்றன.
ஆக்ஷன் காட்சிகள் அதிரடியாகவும், திரையில் ஆரவாரம் கிளப்பக்கூடிய வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
சிறையில் ரவுடிகள் ஆட்டம் போடுவது போன்ற லாஜிக் தவறுகள், மற்றும் சில இடங்களில் வரும் டார்க் காமெடிகள், திரைப்பட ஓட்டத்திற்கு சிறிதளவு தடையாக இருந்தாலும், அதனை மறைக்கும் வகையில் விறுவிறுப்பாக நகரும் திரைக்கதை பாராட்டத்தக்கது.
‘குட் பேட் அக்லி’ என்பது ஒரு முழுமையான அஜித் ரசிகர்களுக்கான விருந்தாக அமைந்துள்ளது. ஆக்ஷன், உணர்வு, இசை, நடிப்பு என அனைத்தும் கலந்துள்ள இந்த படம், மகிழ்ச்சியான மாஸ் அனுபவம். இயக்குநர் ஆதிக், தனது ஹீரோவை சரியான பாணியில் பயன்படுத்தி ரசிகர்களை திருப்திப்படுத்தியுள்ளார்.
Comments
Post a Comment