விமான நிலையங்களில் போர்டிங் பாஸ், செக்-இன் தேவையில்லாமல் பயணம் செய்யும் யுகம் ஆரம்பமாகும் – ICAO முக்கிய அறிவிப்பு
விமான நிலையங்களில் போர்டிங் பாஸ், செக்-இன் தேவையில்லாமல் பயணம் செய்யும் யுகம் ஆரம்பமாகும் – ICAO முக்கிய அறிவிப்பு
கடந்த 50 ஆண்டுகளில் விமானப் போக்குவரத்துத் துறையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றங்களில் ஒன்றாக, எதிர்காலத்தில் விமானங்களுக்கு போர்டிங் பாஸ் அல்லது செக்-இன் செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் பயணிக்க முடியுமென தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த முக்கியமான தகவலை பிரபல தி டைம்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. விமான பயண கொள்கையை வடிவமைக்கும் பொறுப்பை ஐ.நா. அமைப்பான சர்வதேச சிவில்விமானப் போக்குவரத்து அமைப்பு (ICAO) மேற்கொண்டு வருகிறது. டிஜிட்டல் மயமாக்கத்தின் மூலம், விமான நிலையங்களில் நேரம் வீணாகும் போர்டிங் பாஸ் மற்றும் செக்-இன் செயல்பாடுகளைத் தவிர்க்கும் முயற்சிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ICAO தரப்பில் வெளியிடப்பட்ட தகவலின்படி, இந்த மாற்றம் அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் . தற்போது, பயணிகள் ஆன்லைனில் அல்லது விமான நிலையத்தில் செக்-இன் செய்ய வேண்டும். அப்போது அவர்களுக்கு பார்கோடு கொண்ட போர்டிங் பாஸ் வழங்கப்படுகிறது. இது விமான நிலையத்தின் பல கட்டங்களை கடக்கும்போது ஸ்கேன் செய்யப்படுகிறது.
இப்போது, “Digital Travel Credentials” எனப்படும் புதிய முறையின் கீழ், பயணிகள் தங்கள் பாஸ்போர்ட்களை நேரடியாக தொலைபேசியில் பதிவேற்றி, முகம் அடையாளமாக பயணிக்க முடியும். முன்பதிவின் போது பயணிகள், விமான பாஸ் மற்றும் சேவைகளை உள்ளடக்கிய டிஜிட்டல் பாஸை பதிவிறக்கம் செய்வார்கள். இதில் இடம்பெறும் அனைத்து விவரங்களும் தானாகவே புதுப்பிக்கப்படும்.
இந்த புதிய டிஜிட்டல் முறை செயல்பட, விமான நிலையங்கள் தங்கள் உள்கட்டமைப்பில் பெரிய மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக பாஸ்போர்ட் புகைப்படங்கள் மற்றும் பயணிகளின் முகங்களை ஸ்கேன் செய்ய தேவையான தொழில்நுட்பங்கள் தேவைப்படும்.
இது பயணிகளின் தனியுரிமை குறித்து பல கேள்விகளை எழுப்பலாம். ஆனால் ICAO தெரிவித்துள்ளதாவது, செக்-இன் செயல்பாட்டின் போது கணினிகள் ஸ்கேன் செய்யும் எந்த தகவலையும் சேமிக்கமாட்டாது.
இந்த மாறுதலால் எதிர்கால விமானப் பயணம் மேலும் விரைவாகவும், பாதுகாப்பாகவும், பயணிகளுக்கு வசதியாகவும் அமையும் என நம்பப்படுகிறது.
Comments
Post a Comment